பிரதமர் மோடிக்கு ரூ.2.85 கோடி சொத்து: அமித்ஷாவுக்கு ரூ.28.63 கோடி

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.85 கோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொத்து மதிப்பு ரூ.28.63 கோடி என தெரிய வந்துள்ளது.

Update: 2020-10-15 23:45 GMT
புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து பட்டியலை பிரதமர் அலுவலகத்திடம் அளித்துள்ளார். இதன் விவரங்கள் வருமாறு:-

* பிரதமர் நரேந்திர மோடியின் நிகரச்சொத்து மதிப்பு ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி ரூ.2 கோடியே 85 லட்சம் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ரூ.36 லட்சம் அதிகம் ஆகும். கடந்த ஒரு வருடத்தில் ரூ.3.3 லட்சம் வங்கி வைப்புகள் மற்றும் ரூ.33 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பான முதலீடுகளின் வருமானம் காரணமாக மோடியின் நிகரச்சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

* பிரதமர் மோடியிடம் நடப்பு ஆண்டு ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி கையிருப்பு ரூ.31 ஆயிரத்து 450 ஆகும். குஜராத் மாநிலம், காந்திநகர் என்.எஸ்.சி. பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருப்பு ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 173. அதே வங்கி கிளையில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 28 ஆயிரத்து 939-க்கு நிலைத்த வைப்பு (எப்.டி.ஆர்.), பல்வாய்ப்பு வைப்பு சேமிப்பும் (எம்.ஓ.டி.) வைத்துள்ளார்.

* பிரதமர் மோடி ரூ.8 லட்சத்து 43 ஆயிரத்து 124 மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்கள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 957 மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், ரூ.20 ஆயிரம் வரி சேமிப்பு உள்கட்டமைப்பு பத்திரங்கள், ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு சற்று அதிகமான அசையும் சொத்துகள் வைத்துள்ளார்.

* பிரதமர் மோடி ரூ.1½ லட்சம் மதிப்பிலான 4 தங்க மோதிரங்கள் (எடை சுமார் 45 கிராம்) வைத்திருக்கிறார்.

* குஜராத் காந்திநகரில் செக்டார் 1-ல் 3,531 சதுர அடி நிலத்தை பிரதமர் மோடி கூட்டாக வைத்துள்ளார். இந்த சொத்துக்கு மேலும் 3 கூட்டாளிகள் உள்ளனர். மொத்தத்தில் 4 பேருக்கும் தலா 25 சதவீதம் பங்கு உள்ளது.

* மோடியின் சொத்து பட்டியலில் இடம்பெற்றிருக்கிற சொத்து, அவர் குஜராத் முதல்-மந்திரியாக பதவி ஏற்பதற்கு 2 மாதங்கள் முன்பாக (2002, அக்டோபர் 25-ந்தேதி) வாங்கப்பட்டதாகும். அப்போது இந்த சொத்தின் விலை ரூ.1.3 லட்சம் ஆகும்.

* தற்போது மோடியின் சொத்து அல்லது அசையா சொத்துகளின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் ஆகும்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொத்து பட்டியலும் தெரிய வந்துள்ளது. நடப்பு ஆண்டு ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி அவரது நிகரச்சொத்து மதிப்பு ரூ.28 கோடியே 63 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு இது ரூ.32 கோடியே 30 லட்சமாக இருந்தது. தற்போது சொத்து மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம், பங்குச்சந்தையின் வீழ்ச்சிதான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமித்ஷாவை பொறுத்தமட்டில், அவருக்கு குஜராத்தில் 10 அசையும் சொத்துகள் உள்ளன. இவருடைய சொத்துகள் மற்றும் தாய் வழி வந்த பரம்பரை சொத்துகள் ரூ.13 கோடியே 56 லட்சம் மதிப்பிலானவை.

அவரிடம் ரொக்கமாக ரூ.15 ஆயிரத்து 814, வங்கி சேமிப்பாக ரூ.1 கோடியே 4 லட்சம், ரூ.13 லட்சத்து 47 ஆயிரம் காப்பீடு, பென்ஷன் பாலிசிகள், ரூ.2 லட்சத்து 79 ஆயிரம் நிலைத்த வைப்புகள், ரூ.44 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நகைகள் உள்ளன.

அமித்ஷாவுக்கு மரபுரிமையாக வந்த பங்குகள் ரூ.12 கோடியே 10 லட்சம், சொந்தமாக வைத்துள்ள பங்குகள் ரூ.1.4 கோடி. நடப்பு ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி அவற்றின் மொத்த மதிப்பு ரூ.13.5 கோடி. கடந்த ஆண்டு இது ரூ.17.9 கோடியாக இருந்தது.

மேலும், அமித்ஷாவுக்கு ரூ.15.77 லட்சம் கடன்கள் உள்ளன. அமித் ஷாவின் மனைவி சோனல் சொத்து மதிப்பு ரூ.9 கோடியில் இருந்து ரூ.8.53 கோடியாக குறைந்துள்ளது. பங்குகளின் மதிப்பும் ரூ.4.4 கோடியில் இருந்து ரூ.2.25 கோடியாக குறைந்துள்ளது.

இதே போன்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டவர்களின் சொத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மந்திரிகளில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பெரும்பணக்காரர்களில் ஒருவர் ஆவார். அவரிடம் ரூ.27.47 கோடி, அவரது மனைவி சீமா கோயலிடம் ரூ.50.34 கோடி, எச்.யு.எப். என்னும் ஒன்றுபட்ட இந்து குடும்ப சொத்து ரூ.45.65 லட்சம் என மொத்த சொத்து மதிப்பு ரூ.78.27 கோடி ஆகும்.

கடந்த கால நிதிமந்திரிகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் குறைவான சொத்துகளே உள்ளன. இவர் கணவருடன் சேர்ந்து ரூ.99.36 லட்சம் குடியிருப்பு, ரூ.16.02 லட்சம் விவசாயம் சாரா நிலம் வைத்துள்ளார். இவரிடம் கார் இல்லை. ஒரு பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் வைத்துள்ளார். 19 வருட வீட்டுக்கடன், 10 வருட அடமானக்கடன் உள்ளது.

மேலும் செய்திகள்