இந்தியாவில் மேலும் 81,541 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்
இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73,07,098 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இதுவரை வாய்க்காத நிலையில், அதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக தனிமைப்படுத்துவதுமே கட்டுப்படுத்துவதற்கான வழிகளாக உள்ளன. பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிவதற்கு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
இதை உணர்ந்த உலக நாடுகள் கொரோனா பரிசோதனைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அந்தவகையில் இந்தியாவும் இந்த பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் முதல் தொற்று ஏற்பட்ட கடந்த ஜனவரி மாதம், புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம் மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது.
ஆனால் அதன்பிறகு நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த ஏராளமான ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய நிலையில் 1,935 ஆய்வகங்கள் இரவு-பகலாக கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளன. இதில் 823 ஆய்வுக்கூடங்கள் தனியாருக்கு சொந்தமானவை ஆகும்.
இவ்வாறு பரிசோதனை வாய்ப்புகளையும், திறனையும் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் தினமும் சராசரியாக 11 லட்சத்துக்கு மேற்பட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 11.38 லட்சம் பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 9.12 கோடி பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 72,39,389ல் இருந்து 73,07,098 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.52% ஆகும். குணமடைந்தோர் விகிதம் 87.36% ஆக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,708 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 680 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 81,541 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63,01 லட்சத்தில் இருந்து 63,83 லட்சமானது. கொரோனா பாதித்த 8.12 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,10,586ல் இருந்து 1,11,266 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.