நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 8½ கோடியை கடந்தது புதிதாக 73 ஆயிரம் பேருக்கு தொற்று
நாடு முழுவதும் புதிதாக 73 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 8½ கோடியை கடந்துள்ளது.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் சீராக பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் இதுவரை கிடைக்காத நிலையில், அதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே தற்போதைய தடுக்கும் ஆயுதமாக விளங்கி வருகின்றன. அந்தவகையில் முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விழிப்புணர்வு செயல்களே மக்களை தொற்றில் இருந்து விலகி இருக்கச்செய்து வருகின்றன.
இதைப்போல கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகரிப்பதன் மூலம், பாதிப்பை விரைவாக கண்டறிந்து நோயாளிகளை தனிமைப்படுத்த முடிகிறது. இதுவும் மேற்கொண்டு தொற்று பரவுவதை கட்டுப்படுத்துகிறது. இதனால் கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகளை அனைத்து நாடுகளும் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை சமீப காலமாக சராசரியாக தினமும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. எனினும் இந்தியா தினசரி 15 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான திறனை ஏற்கனவே பெற்றிருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது.
அந்தவகையில் நேற்று முன்தினம் மட்டுமே 11 லட்சத்து 64 ஆயிரத்து 18 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் நாடு முழுவதும் 9-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 8½ கோடியை கடந்து விட்டது. மொத்தம் 8 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 698 பரிசோதனைகள் நடந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் கூறியுள்ளது.
‘பரிசோதனை, கண்டறிதல், தனிமைப்படுத்தல், தரமான சிகிச்சை’ என்ற தாரக மந்திரத்தை கொரோனாவுக்கு எதிராக இந்தியா பயன்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் கொரோனா பரிசோதனைகளுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 73 ஆயிரத்து 272 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு 69 லட்சத்து 79 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது.
இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 926 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் இதுவரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக அதிகரித்து இருக்கிறது.
அதேநேரம் நாடு முழுவதும் மேலும் 82 ஆயிரத்து 753 பேர் அந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இது மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கையை 59 லட்சத்து 88 ஆயிரத்து 822 ஆக உயர்த்தி இருக்கிறது.
தற்போதைய நிலையில் 8 லட்சத்து 83 ஆயிரத்து 185 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இது முந்தைய நாளை விட 10 ஆயிரத்து 407 குறைவாகும். இது மொத்த பாதிப்பில் சுமார் 8-ல் ஒரு பங்காகும்.
இதன் மூலம் நாட்டின் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக 9 லட்சத்துக்கு கீழே நீடித்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் விகிதம் 12.65 ஆக சரிந்திருக்கிறது. மேலும் நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 85.81 ஆகவும், இறப்பு விகிதம் 1.54 ஆகவும் நீடிக்கிறது.
புதிதாக குணமடைந்தவர்களில் 76 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், ஒடிசா, டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
இதைப்போல புதிய பாதிப்பு எண்ணிக்கையிலும் 79 சதவீதத்தினர் மேற்படி 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும், இதிலும் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒரே நாளில் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் புதிதாக ஏற்பட்டுள்ள 926 மரணங்களிலும் 32 சதவீதத்துக்கும் அதிகமானோர் மராட்டியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்க, அடுத்தடுத்த இடங்களை இந்தியாவும், பிரேசிலும் பெற்றுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு, மரணம், குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர் என அனைத்து தரப்பிலும் மராட்டியமே முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.