தொடர்ந்து 5-வது நாளாக தொற்று பாதிப்பு குறைவு; 13.75 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து 5-வது நாளாக குறைந்துள்ளது. மொத்த பாதிப்பில் 13.75 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

Update: 2020-10-06 19:55 GMT
புதுடெல்லி,

சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், 10 மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக அமெரிக்கா தொடர்கிறது.

உலகளவில் 3.58 கோடி பேருக்கு தொற்று பாதித்துள்ளது. அமெரிக்காவில் மட்டுமே 76.82 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக நம் நாடு உள்ளது. தொடர்ந்து பிரேசில் (49.40 லட்சம்), ரஷியா (12.37 லட்சம்), கொலம்பியா (8.62 லட்சம்) ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் தொற்று பாதிப்பு சற்றே குறைந்து வருவது ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

அந்த வகையில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்று தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 1-ந் தேதி 86 ஆயிரத்து 821 பேருக்கு தொற்று பதிவானது. 2-ந் தேதி அது 81 ஆயிரத்து 484 ஆகவும், 3-ந் தேதி 79 ஆயிரத்து 476 ஆகவும், 4-ந் தேதி 75 ஆயிரத்து 829 ஆகவும், 5-ந் தேதி 74 ஆயிரத்து 442 ஆகவும், நேற்று (6-ந் தேதி) 61 ஆயிரத்து 267 ஆகவும் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 10 லட்சத்து 89 ஆயிரத்து 403 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் நேற்று 61 ஆயிரத்து 267 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 787 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

தொற்று பாதித்தோர் எண்ணிக்கையை விட ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பியோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் அதிகம் என்பது கவனத்தை கவர்வதாக அமைந்துள்ளது.

இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 56 லட்சத்து 62 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது. மீண்டவர்களில் 74 சதவீதம்பேர், மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம், தமிழகம், கேரளா, உத்தரபிரதேசம், ஒடிசா, டெல்லி, சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான். மேலும் இந்தியாவில் மீட்பு விகிதமும் 84.70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு நேற்று 884 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி 1 லட்சத்து 3 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் பலி விகிதம் என்பது 1.55 சதவீதமாக குறைந்துள்ளது.

நேற்று பலியான 884 பேரில், 263 பேர் மராட்டிய மாநிலத்தவர் ஆவர். கர்நாடகத்தில் 84 பேரும், உத்தரபிரதேசத்தில் 63 பேரும், மேற்கு வங்காளத்தில் 61 பேரும், பஞ்சாப்பிலும், ஆந்திராவிலும் தலா 38 பேரும், சத்தீஷ்காரில் 36 பேரும், டெல்லியில் 32 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மொத்த பலியான 1 லட்சத்து 3 ஆயிரத்து 569-ல் அதிக பலியுடன் மராட்டியம் (38 ஆயிரத்து 347) முதல் இடத்தில் தொடர்கிறது. அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. 3-வது இடத்தை கர்நாடகம் (9,370) வகிக்கிறது. உத்தரபிரதேசத்தில் 6,092 பேரும், ஆந்திராவில் 6.019 பேரும், டெல்லியில் 5,542 பேரும் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 19 ஆயிரத்து 23 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 13.75 சதவீதம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாட்டில் 8 கோடியே 10 லட்சத்து 71 ஆயிரத்து 797 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளிவிவரம் கூறுகிறது.

மேலும் செய்திகள்