சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரணாவத் டுவிட்
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார்
மும்பை,
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிவசேனாவுக்கும், நடிகைக்கும் மோதல் உண்டானது.
மேலும் பலத்த எதிர்ப்பை மீறி அவர் நேற்று முன்தினம் மும்பை வந்தார். இதற்கிடையே பாந்திரா பாலிஹில்லில் உள்ள கங்கனா ரணாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக கூறி மாநகராட்சியினர் அவற்றை இடித்து தள்ளினர். இந்த விவகாரங்களால் கங்கனா ரணாவத் மற்றும் உத்தவ் தாக்கரே அரசு இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், மராட்டியத்தில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கங்கனா ரணவாத் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள கங்கனா ரணாவத் கூறியிருப்பதாவது: “ மராட்டியத்தில் உங்கள் அரசு, என்னை நடத்தும் விவகாரம், பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா?
சட்ட மேதை அம்பேத்கார் வழங்கிய அரசியலமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உங்கள் அரசை உங்களால் கேட்க முடியவில்லையா? பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களை நீங்கள் அறிந்திருக்க கூடும். சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி ஒரு பெண்ணை உங்கள் அரசு துன்புறுத்தும் நிலையில், உங்களின் அமைதியையும் அலட்சியத்தையும் வரலாறு மதிப்பு செய்யும். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.