லடாக் எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் சீன ராணுவம் குவிப்பு; புகைப்படம் வெளியீடு
லடாக்கின் கிழக்கு பிரிவில் பயங்கர ஆயுதங்களுடன் சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ள புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
லே,
லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் எல்லையில் பதற்ற நிலை நீடிக்கிறது. இந்த நிலையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என கூறப்பட்டது. எனினும், எந்த மாதிரியான பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இதேபோன்ற குற்றச்சாட்டை சீன வெளியுறவு அமைச்சகமும் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அணுகுமுறையானது ஒப்பந்த விதிமீறல் என்றும் இது தீவிர ராணுவ அத்துமீறல் நடவடிக்கை என்றும் சீனா குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது.
எனினும், சீனாவின் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம் நிராகரித்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவம் கூறுகையில், ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி இந்திய நிலைகளை நோக்கி நெருங்கி வர முயற்சித்ததோடு வானை நோக்கி சீனா துப்பாக்கியால் சுட்டது. ஆனால், உள்நாட்டு, சர்வதேச சமூகங்களை சீனா தனது அறிக்கைகளால் ஏமாற்ற முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லடாக்கின் கிழக்கு பிரிவில் பயங்கர ஆயுதங்களுடன் சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி ராணுவம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், லடாக்கின் கிழக்கு பிரிவில் எல்லை கோட்டு பகுதியில் சீன வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் தங்களது முதுகு பகுதியில் துப்பாக்கிகளை தொங்க விட்டுள்ளனர். அதனுடன், தங்களது கைகளில் பயங்கர ஆயுதங்களை ஏந்தி இருக்கின்றனர்.
எனினும், அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் நெருங்க விடவில்லை. அப்படி அவர்கள் நெருங்கினால், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்ததுபோன்று மற்றொரு வன்முறை சம்பவம் நடக்க கூடும் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது நடத்திய தாக்குதலின்போது, அவர்கள் ஆணிகள் பதிக்கப்பட்ட இரும்பு தடிகளை பயன்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.