தேசிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவதில் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு: கவர்னர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

கவர்னர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தேசிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவதில் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு இருப்பதாக கூறினார்.

Update: 2020-09-08 00:00 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த தேசிய கல்வி கொள்கை பற்றிய கவர்னர்கள் மாநாடு நேற்று காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. உயர் கல்வியை மேம்படுத்துவதில் தேசிய கல்வி கொள்கையின் பங்கு என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்து இருந்தது.

இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாநில கவர்னர்கள், கல்வி மந்திரிகள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி கொள்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது.

பாட புத்தகத்தில் உள்ள பாடங்களை படிப்பது மட்டுமே அல்லாமல், புதிது புதிதாக கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும் இந்த கல்வி கொள்கை அமைந்து இருக்கிறது. மேலும் இது மாணவர்களின் பாடச்சுமையையும் குறைக்கும்.

இளம் வயதிலேயே தொழில் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்பதால் எதிர்கால வாழ்க்கையை சந்திக்க இளைஞர்கள் சிறந்த முறையில் தயார் ஆவார்கள். இளைஞர்கள் பெற்றுள்ள பயிற்சி கல்வியின் மூலம் அவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு, சர்வதேச அளவிலும் அவர்கள் அதிக வேலைவாய்ப்புகளை பெற முடியும்.

21-ம் நூற்றாண்டில் இந்தியாவில் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்க மத்திய அரசு பாடுபட்டுக்கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கையின் மூலம், மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். இதனால் கல்வி கற்பதில் அவர்களுக்குள்ள மன அழுத்தம் குறையும்.

தேசிய கல்வி கொள்கையில் அரசின் தலையீடு குறைவாகவே இருக்கும். வெளிநாட்டு கொள்கையும், பாதுகாப்பு கொள்கையும் நாட்டுநலனை கருத்தில் கொண்டதே தவிர, அரசாங்கத்தின் நலனை கருத்தில் கொண்டது அல்ல. அதுபோல்தான் தேசிய கல்வி கொள்கையும். இந்த கல்வி கொள்கை அனைவரின் நலனுக்காகவும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கல்வி முறையில் மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பங்கு உள்ளது. புதிய கல்வி கொள்கை மற்றும் கல்வி முறை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் ஆகும்.

சர்வதேச கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தி தந்து உள்ளது. இதன்மூலம் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் சர்வதேச தரத்திலான சிறந்த கல்வியை பெற முடியும்.

சர்வதேச கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் இந்தியாவில் தொடங்கப்படும் போது நமது மாணவர்கள் எத்தகைய போட்டிகளையும் எதிர்கொள்ளும் திறன் பெறுவார்கள்.

தேசிய கல்வி கொள்கையில் உள்ள சில அம்சங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அவற்றை திறந்த மனதுடன் பரிசீலித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதோடு, சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும். இந்த கல்வி கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு அதிக நெகிழ்ச்சித்தன்மையுடன் நடந்து கொள்ளும். தேசிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவதில் நம் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசுகையில், “கல்விக்கான மத்திய, மாநில அரசுகளின் முதலீட்டை 6 சதவீதமாக உயர்த்துவதை தேசிய கல்வி கொள்கை நோக்கமாக கொண்டு இருக்கிறது. இந்த இலக்கை விரைவில் எட்ட வேண்டும். தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி கொள்கை, இந்திய மொழிகளை மேலும் வலுப்படுத்த உதவுவதோடு, மாணவர்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும். எதிர்கால சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு, கல்விக்காக செய்யப்படும் முதலீட்டை தவிர வேறு சிறந்த முதலீடு இருக்க முடியாது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றுவதில்தான் தேசிய கல்வி கொள்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது” என்றார்.

மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் பேசுகையில், தேசிய கல்வி கொள்கை சர்வதேச அளவில் இந்தியாவை கல்வித்துறையில் சக்திவாய்ந்த நாடாக மாற்றும் என்றும், ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்