மும்பையில் கொரோனா பரவல் இரட்டிப்பாகும் காலம் 71 நாட்களாக குறைந்தது
மும்பையில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 71 நாட்களாக குறைந்து உள்ளது.
மும்பை,
மும்பையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் அதிகரித்து உள்ளது. இதில் நேற்று தலைநகரில் 1,910 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை அங்கு 1 லட்சத்து 55 ஆயிரத்து 622 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல நகரில் புதிதாக 37 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 7 ஆயிரத்து 869 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மும்பையில் நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 478 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 23 ஆயிரத்து 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரில் நோய் பாதிப்பில் இருந்து 79 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பு காலம் குறைந்து 71 நாட்களாகி உள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன் நகரில் நோய் பரவல் இடிப்பாகும் காலம் 84 நாட்களாகவும், குணமானவர்கள் சதவீதம் 80 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.