பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் பிளவு இல்லை - ஜே.பி.நட்டா உறுதி

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார்தான் முதல்-மந்திரி வேட்பாளர். பா.ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறும் என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.;

Update:2020-08-24 01:30 IST
புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி அரசு நடந்து வருகிறது. அதன் பதவிக்காலம் முடிவடைவதால், வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளத்துக்கும், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை மோதல் நடந்து வருகிறது. அதிக தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் லோக் ஜனசக்தி, கூட்டணியை விட்டு வெளியேறக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூட்டணியில் பிளவு இல்லை என்று பா.ஜனதா கூறியுள்ளது. பீகார் மாநில பா.ஜனதாவின் செயற்குழு கூட்டம் நேற்று பாட்னாவில் நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் அதில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

அவர் பேசியதாவது:-

பீகாரில் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார்தான் முதல்- மந்திரி வேட்பாளர். நமது கூட்டணியில் பிளவு இல்லை. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம், பா.ஜனதா, லோக் ஜனசக்தி ஆகியவை நிதிஷ்குமார் தலைமையில் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெறும்.

பா.ஜனதா தன்னைத்தானே பலப்படுத்திக்கொள்வதுடன், கூட்டணி கட்சிகளும் பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. பா.ஜனதாவை மக்கள் நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு சித்தாந்தமோ, மக்களுக்கு சேவை செய்யும் உணர்வோ இல்லை. அற்ப அரசியலை தாண்டி அவர்கள் வெளிவர முடியாது.

பீகாரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் நிதிஷ்குமார் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 73.48 சதவீதமாக உள்ளது. வீடு, வீடாக ஆய்வு செய்து, 10 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தி உள்ளது. தினசரி கொரோனா பரிசோதனை, 35 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.

மோடி அரசு அறிவித்த சிறப்பு நிதி தொகுப்பை முழுமையாக பயன்படுத்தி உள்ளது. வெள்ள தடுப்பு நடவடிக்கையிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. மோடி அரசின் உதவிகளை பா.ஜனதாவினர் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

மேலும் செய்திகள்