இந்தியாவில் ஒரே நாளில் 34,956 பேருக்கு தொற்று உறுதி: கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 34 ஆயிரத்து 956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சாவு எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது.

Update: 2020-07-18 00:15 GMT
புதுடெல்லி,

கொரோனா தொற்றால் எல்லா நாடுகளுமே பாதிக்கப்பட்டு உள்ளன.

உலகப் போர்கள் நடந்த போதுகூட, நாடுகள் இந்த அளவுக்கு கலங்கியது இல்லை. கொரோனாவின் பிடியில் இருந்து தங்கள் மக்களை காப்பாற்ற ஒவ்வொரு நாடும் போராடிக்கொண்டு இருக்கிறது. என்னதான் முக கவசம், தனிமனித இடைவெளி, ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் கொரோனா அடங்க மறுக்கிறது. இதேநிலை நீடித்தால் என்ன ஆகுமோ? என்ற அச்சம் எல்லா நாடுகளுக்குமே எழுந்து உள்ளது.

நோய்த்தொற்று பரவலின் வேகமும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான இந்த நோய்த்தொற்று அந்த நாட்டிலும், அதன்பிறகு இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, இந்தியாவில் சற்று தாமதமாகத்ததான் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியது.

கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதிதான் நம் நாட்டில் கொரோனா பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட நோய்த் தொற்று சில நாட்களில் அசுர வேகத்தில் பரவ தொடங்கியது. இப்போது உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 20 நாட்களில் கொரோனா பாதிப்பு இருமடங்கு அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த மாதம் (ஜூன்) 27-ந் தேதி வரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சம் ஆகும். இந்த எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை தாண்டிவிட்டது. அதாவது, 20 நாட்களில் கொரோனா பாதிப்பு இருமடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து முதலில் 110 நாட்களில் 1 லட்சம் பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த 59 நாட்களில் 9 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று பரவிவிட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர பட்டியலின்படி, நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 34 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்து இருக்கிறது.

இதே 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 942 பேர் இந்த நோய் பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 757 ஆக உயர்ந்து உள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்து 42 ஆயிரத்து 473 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 687 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 602 ஆக உயர்ந்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், டெல்லி 3-வது இடத்திலும், கர்நாடகம் 4-வது இடத்திலும், குஜராத் 5-வது இடத்திலும் உள்ளன.

மராட்டியத்தில் நேற்று மட்டும் புதிதாக 8,641 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 281 ஆக அதிகரித்தது. அங்கு நேற்று 266 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து சாவு எண்ணிக்கை 11 ஆயிரத்து 194 ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழ்நாடு

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று புதிதாக 4,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 79 பேர் உயிரிழந்ததால் சாவு எண்ணிக்கை 2,315 ஆக உயர்ந்தது.

டெல்லியில் புதிதாக 1,652 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 645 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று 58 பேர் மரணம் அடைந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,545 ஆக அதிகரித்தது.

கர்நாடகத்தில் புதிதாக 4,169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 422 ஆகவும், புதிதாக 104 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து சாவு எண்ணிக்கை 1,032 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

குஜராத்தில் நேற்று 929 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 481 ஆகவும், புதிதாக 10 பேர் இறந்ததால் மொத்த சாவு எண்ணிக்கை 2,089 ஆகவும் உயர்ந்து உள்ளது.

இதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் இருந்தாலும் அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மேலும் செய்திகள்