பீகாரில் மின்னல் தாக்கி 23 பேர் பலி; தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
பீகாரில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் ஒரே நாளில் 23 பேர் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
போஜ்பூர்,
பீகாரில் கடந்த சில நாட்களாக பருவநிலை மோசமடைந்து உள்ளது. இந்த நிலையில் போஜ்பூர், சரண், கைமூர், பாட்னா மற்றும் பக்சார் ஆகிய 5 மாவட்டங்களில் கடுமையாக மின்னல் தாக்கி உள்ளது.
இந்த சம்பவத்தில் போஜ்பூரில் அதிக அளவாக 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் மேலாண் துறை தெரிவித்து உள்ளது. இதனால் மொத்தம் 23 பேர் இன்று பலியாகி உள்ளனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என முதல் மந்திரி நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். பருவநிலை மோசமடைந்துள்ள சூழலில், மக்கள் அனைவரும் தொடர்ந்து வீடுகளிலேயே இருக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பீகாரில் கடந்த ஒரு வாரத்தில் மின்னல் தாக்கி 100 பேருக்கும் கூடுதலாக உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி வானிலை நிபுணர்கள் கூறும்பொழுது, வழக்கத்திற்கும் கூடுதலான வெப்பநிலை மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் ஈரக்காற்று ஆகியவை கலந்து காணப்படும் காலநிலையால், வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மை தோன்றியுள்ளது. இதனால், மின்னல் தாக்கும் சம்பவங்கள் பெரிய அளவில் நடந்துள்ளன என கூறுகின்றனர்.