தாய்மை அடையும் வயது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழு: ஜெயா ஜெட்லி தலைமையில் மத்திய அரசு அமைத்தது
தாய்மை அடையும் வயது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவினை, ஜெயா ஜெட்லி தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் பெண்கள் தாய்மை அடையும் வயது, பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள் மரணம் அடைவதை குறைப்பதற்கான வழிமுறைகள், ஊட்டச்சத்து அளவை அதிகரித்தல் ஆகியவற்றை குறித்து பெண்கள் நலனை மேம்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக ஜெயா ஜெட்லி (இவர் மறைந்த மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டசின் நெருங்கிய தோழி ஆவார்) தலைமையிலான 10 உறுப்பினர் குழுவை மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இதையொட்டி அந்த அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் இடம் பெற்றிருக்கிற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
இந்த சிறப்பு பணிக்குழு பெண்களின் திருமண வயது, தாய்மைப்பேறு அடையும் வயது, மருத்துவ நல்வாழ்வு, கர்ப்ப காலத்திலும் அதன்பின்னரும் தாய் மற்றும் சேய் ஊட்டச்சத்து ஆகியவற்றை ஆராய வேண்டும். சிசு மரணம், பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள் மரணவிகிதம், கருவுறுதல் விகிதம், குழந்தை பாலின விகிதம் உள்ளிட்ட தொடர்புடைய அம்சங்களையும் ஆராய வேண்டும்.
இந்த பணிக்குழு தனது அறிக்கையை அடுத்த மாதம் 31-ந் தேதி அளிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.