கொரோனா பரிசோதனைக்கு உள்நாட்டில் தயாரித்த கருவிகளை பயன்படுத்தலாம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனா பரிசோதனைக்கு உள்நாட்டில் தயாரித்த எலிசா கருவிகளை பயன்படுத்தலாம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2020-06-05 22:30 GMT
புதுடெல்லி, 

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும் ஆர்.டி.-பி.சி.ஆர். கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் இந்தக் கருவிகளை பயன்படுத்துகிற நிலை இருக்கிறது. அதிலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்த கருவிகள் தரம் குறைந்தவையாக இருந்ததால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த கருவிகள் சீனாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த பரிசோதனை கருவி பற்றாக்குறையால்தான் வளர்ந்த நாடுகளைப்போன்று பொதுமக்களுக்கு பரவலாக பரிசோதனைகளை அதிகரிக்க முடியவில்லை.

இந்த நிலையில் உள்நாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து எலிசா கருவிகளை உருவாக்கி உள்ளன.

இந்த எலிசா பரிசோதனை கருவிகளை கொண்டு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிற ஒத்துழைப்பாளர்களுடன் இணைந்து நடத்திய ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவு இந்திய மருத்துவ ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது.

இந்த கருவியைப் பொறுத்தமட்டில், இது 92.37 சதவீதம் உணர்திறன் கொண்டதாக இருக்கும். 97.9 சதவீதம் குறிப்பிடத்தக்கதாக, வலுவானதாக இருக்கும். இதன் நேர்மறை கணிப்பு மதிப்பு 94.44 மற்றும் எதிர்மறை கணிப்பு மதிப்பு 98.14 சதவீதமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது 513 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் உள்நாட்டு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவதில், எலிசா பரிசோதனை நம்பகமானது. ஆன்டிபாடிகளை கண்டறிவதற்கு உகந்தவை என தெரியவந்தது. மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகளை செய்வதற்கும், தொற்று நோயியல் ஆய்வுகளுக்கும் இந்த எலிசா கருவிகளை பயன்படுத்தலாம் என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ள முடியும், குறைந்த நேரத்தில் அதிகமான நபர்களுக்கு பரிசோதனை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார பணியாளர்கள், தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனைக்கு எலிசா பரிசோதனை கருவிகளை பயன்படுத்த முடியும்.

மேலும் செய்திகள்