ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை
ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டி ஆசிரியை ஒருவர் மாதம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு, அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெயின்புரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் சுமார் 25 பள்ளிகளில் பணியாற்றுவதாகக் கூறி அவருக்கு மாதந்தோறும் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மாநிலத்தில் அம்பேத்கார் நகர், அலிகார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் கஸ்தூரிபாய் காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடரபான விசாரணைக்கு உத்தரப்பிரதேச மாநில துவக்கக் கல்வித் துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியையின் பெயர் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், அதுபற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தற்போது அந்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார்.
தகவல்களின் அடிப்படையில் அவர் ஒருவருக்கு மட்டும் மாதம் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை எதுவும் இல்லை. இதுவரை இந்த தகவல் எந்த வகையிலும் உறுதி செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் முறைகேடு நடந்தது உண்மை என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படும். இதுபோல வேறு சில ஆசிரியர்களும் முறைகேடாக வேறு பள்ளிகளில் பணியாற்றுகிறார்களா என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.