புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள். அவர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பயண கட்டணத்தில் மத்திய அரசு 85 சதவீதத்தை ஏற்றுக்கொள்கிறது.
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடகத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வந்துள்ளவர்கள் சிரமிக் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவை மாநில அரசே ஏற்கும்“ என்றார்.
முதல்-மந்திரி எடியூரப்பாவின் இந்த முடிவை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வரவேற்றுள்ளார். காங்கிரஸ் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக முதல்-மந்திரிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.