185 செவிலியர்கள் ராஜினாமா விவகாரம்; எங்கள் மீது எச்சில் துப்பினர் என குற்றச்சாட்டு

மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் இனவெறி, வேற்றுமை மற்றும் எச்சில் துப்புதல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Update: 2020-05-20 10:14 GMT
இம்பால்,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புக்கு 2,961 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 1,074 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர்.  இதுவரை 250 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் நாட்டில் அதிக பலி எண்ணிக்கையில் மராட்டியம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது.

மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களாக பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் 2 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர்.  இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் பின்னடைவாக, செவிலியர்கள் பலர் கடந்த வாரம் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.  மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர்.  இந்த சூழலில், ஒரே நாளில் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு சொந்து ஊருக்கு சென்று விட்டனர்.

இதேபோன்று பிற வடகிழக்கு மாநில செவிலியர்களும் மற்றும் ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய கூடும் என கூறப்படுகிறது.  அதிக எண்ணிக்கையில் செவிலியர்கள் பணியில் இருந்து விலகியதற்கான சரியான காரணம் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  இதனால் மருத்துவ பணியில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இந்த சூழலில் ஊர் திரும்பிய செவிலியர்களில் ஒருவரான கிறிஸ்டெல்லா என்பவர் கூறும்பொழுது, எங்களது பணியை விட்டு சென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை.  ஆனால், பணியில் இருந்தபொழுது இனவெறி, வேற்றுமை போன்றவற்றை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  மக்கள் சில நேரங்களில் எங்கள் மீது எச்சில் துப்ப கூட செய்தனர்.  எங்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் பற்றாக்குறையாக இருந்தன.  நாங்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் எங்களிடம் கேள்வி கேட்டு வந்தனர் என வருத்தமுடன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்