4-வது கட்ட ஊரடங்கில் பெருமளவு தளர்வுக்கு வாய்ப்பு - பஸ், ரெயில், விமானம் படிப்படியாக இயக்கப்படும்

4-வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பில் பெருமளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. பஸ், ரெயில், விமானங்கள் படிப்படியாக இயக்கப்படும் என்று தெரிகிறது.

Update: 2020-05-15 23:30 GMT
புதுடெல்லி, 

தற்போது அமலில் உள்ள 3-வது கட்ட ஊரடங்கு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், அந்த 4-வது கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த நெறிமுறைகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் இருவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:-

எந்த மாநிலமும் ஊரடங்கை முழுமையாக விலக்கிக்கொள்ள விரும்பவில்லை. படிப்படியாக பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்க விரும்புகின்றன. எனவே, இந்த ஊரடங்கில் பெருமளவு கட்டுப்பாடு தளர்வுகள் இருக்கும்.

பச்சை மண்டலங்கள் முழுமையாக திறந்து விடப்படும். ஆரஞ்சு மண்டலத்தில் குறைவான கட்டுப்பாடுகள் இருக்கும். சிவப்பு மண்டலத்தில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். சிவப்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளில் சலூன்கள் அனுமதிக்கப்படலாம்.

நோய் பாதிப்பு நிறைந்த ‘ஹாட்ஸ்பாட்’களை வரையறுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இதனால், களநிலவரத்தை பொறுத்து மாநிலங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், நாட்டின் எப்பகுதியிலும் சினிமா தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடையாது.

அடுத்த வாரத்தில் இருந்து ரெயில், உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக அனுமதிக்கப்படலாம். ஆனால், முழுமையான சேவையை அனுமதிக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.

தமிழ்நாடு, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்கள், இம்மாதத்துக்குள் ரெயில், விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று கூறியுள்ளன.

சிவப்பு மண்டலங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர இதர இடங்களில் பஸ்கள், உள்ளூர் ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில்சேவை, குறைந்த பயணிகளுடன் அனுமதிக்கப்படலாம். ஆட்டோ, டாக்சி சேவையும் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படலாம். இதுகுறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.

ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில், அத்தியாவசியற்ற கடைகளை திறக்க அனுமதிக்கப்படலாம். அத்தியாவசியமற்ற பொருட் களை வினியோகிக்க ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம். சுற்றுலா துறையை ஊக்குவிக்க ஓட்டல், உணவகங்கள் ஆகியவற்றை திறந்துவிட கேரள அரசு யோசனை தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளின் யோசனை அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்