மராட்டிய மாநிலத்தில் மேலும் 1,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 1,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
கொரோனா தொற்று பாதிப்புகளில் மராட்டிய மாநிலம் முதல் இடத்தில் நீடிக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அங்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று மேலும் 1,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 922 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் இன்று கொரோனா தொற்றுக்கு 54 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 975 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 5,547 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.