இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-03 13:05 GMT
புதுடெல்லி,

உலகம் முழுவதும் உள்ள நாடுகளை கண்ணுக்கு தெரியாத வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் வல்லரசு நாடுகள்கூட விழிபிதுங்கி நிற்கின்றன. சமூக விலகல் ஒன்றைத் தவிர கொரோனாவை அழிக்க வேறு எந்தவொரு தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், ஊரடங்கை நம்பியே உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.

இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கே ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. மார்ச் 25-ந் தேதி தொடங்கிய ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொடர்ந்து 54 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கப்போகிறது. ஆனாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிக்கு ஏற்ப, அரசு எவ்வளவோ பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், அதை நிறைவேற்றுவது மக்கள் கையில்தான் இருக்கிறது.

ஆனால் இன்னும் இந்த வைரசின் உண்மையான குணத்தை மக்கள் அறியவில்லை என்பதற்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினமும் வெளியிடும் புள்ளி விவரம்தான் உதாரணம். ஒவ்வொரு நாளும் அந்த அமைச்சகம் வெளியிடும் விவரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்புக்கு மத்தியில் கொரோனா  இன்று  புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 2487 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 40263 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 1306 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10887 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்