கொரோனா வைரஸ் எதிரொலி; கோவிலில் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம்
கொரோனா வைரஸ் எதிரொலியாக வாரணாசியில் உள்ள கோவிலில் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளது.
வாரணாசி,
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் அமைந்த கோவில் ஒன்றில் உள்ள காசி விஸ்வநாதர் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவித்து உள்ளனர்.
இதுபற்றி கோவிலின் பூசாரி கிருஷ்ண அனந்த பாண்டே கூறும்பொழுது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காசி விஸ்வநாதருக்கு நாங்கள் முகக்கவசம் அணிவித்து உள்ளோம்.
கடவுள் சிலைகளுக்கு குளிராக இருக்கும்பொழுது ஆடைகள் அணிவிப்பது போன்றும், அதிக வெப்பம் நிறைந்திருக்கும்பொழுது ஏ.சி.யோ அல்லது மின் விசிறியோ உபயோகிப்பது போன்றும், முகக்கவசங்களை அணிவித்து உள்ளோம் என கூறினார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடவுள் சிலைகளை யாரும் தொட வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் வலியுறுத்தி கூறுகிறோம். யாரேனும் சிலையை தொட்டால், அதனால் வைரஸ் பரவி, மக்கள் அதிகளவில் பாதிப்படைய கூடும் என்று அவர் கூறினார்.
இந்த கோவிலில் பூசாரி மற்றும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி இறைவழிபடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.