பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது -சட்டசபையில் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது என சட்டசபையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
பாட்னா
மத துன்புறுத்தல்களை எதிர்கொண்டு 2014 டிசம்பர் 31 வரை பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியம், புத்தம், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்தவம் ஆகிய ஆறு முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை (திருத்த) சட்டம் , வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வந்தது.
இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
பீகார் சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது:-
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி எந்த கேள்வியும் இல்லை. இது அசாமின் சூழலில் மட்டுமே அமல்படுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார் என கூறினார்.
முன்னதாக, ஐக்கிய ஜனதா தள துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.