கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றி - எடியூரப்பா அரசு தப்பியது

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் எடியூரப்பா அரசு ஆபத்தில் இருந்து தப்பியது.

Update: 2019-12-09 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 14 மாதங்கள் அவர் ஆட்சி செய்தார். 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.

அதைத்தொடர்ந்து ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. உள்பட 106 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடியூரப்பா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக இருந்தன. இதில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர மீதமுள்ள 15 தொகுதிகளுக்கும் கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை நேற்று 11 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இதில் தொடக்கம் முதலே பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் அக்கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவருமே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றுள்ளார். அவர் பா.ஜனதாவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பி.யின் மகன் ஆவார். ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சி தன்வசம் இருந்த 3 தொகுதிகளையும் பறிகொடுத்துவிட்டது. 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியது. எடியூரப்பா இனி அடுத்த 3½ ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சி நடத்த முடியும்.

பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட 13 தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் மட்டுமே தோல்வி அடைந்தனர். 11 பேர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

12 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் பலம் 105-ல் இருந்து 117 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசின் பலம் 66-ல் இருந்து 68 ஆக அதிகரித்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஏற்கனவே இருந்த நிலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் 34 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

அதே நேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் பலம் 2 ஆக அதிகரித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். இன்னும் 2 இடங்கள் காலியாக உள்ளன.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மந்திரி பதவி - எடியூரப்பா அறிவிப்பு


இடைத்தேர்தல் முடிவு குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

நிலையான ஆட்சியை விரும்பி மக்கள் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர். அதனால் எங்கள் கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எங்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. இனி நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்துவோம்.

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி எங்கள் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் மந்திரி பதவியை வழங்குவோம் என்று உறுதியளித்து உள்ளோம். நாங்கள் அளித்த இந்த உறுதியில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கி, அவர்களின் பகுதிகளில் எங்கள் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்