பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் - ராஜ்நாத் சிங் தகவல்

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றத் தயார் என மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-02 18:25 GMT
புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (வயது 27), 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடிய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கடந்த 29-ந் தேதி கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் மாஜிஸ்திரேட்டு முன்பாக கடந்த சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் லாரி டிரைவர்கள், 2 பேர் அவர்களின் உதவியாளர்கள் ஆவார்கள். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 டி (கும்பல் கற்பழிப்பு), 302 (கொலை), 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. அதில் சமாஜ்வாதி  பெண் எம்.பியான ஜெயா பச்சன், அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இந்தப் பிரச்சினையை எழுப்பி கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதுகுறித்து பதில் அளித்து பேசிய மத்திய  பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், “ஐதராபாத்தில் கால்நடை மருத்துவரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது நமது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவர்கள் செய்த குற்றத்திற்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், அகற்றவும், முழு சபையும் ஒப்புக் கொள்ளும் மாதிரியான சட்டத்தை உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்