சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Update: 2019-11-18 10:10 GMT
சபரிமலை,

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் கடந்த  16-ந்தேதி மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் அதிகளவு குவிந்த வண்ணம் உள்ளனர். 

இதனால் பல மணிநேரம் காத்திருந்த பிறகுதான் பக்தர்களால் சாமிதரிசனம் செய்ய முடிந்தது. பம்பையில் இருந்தே பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். 

அதேவேளையில் கடந்த ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்ததால், சபரிமலை கோவில் வளாக பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த முறை, சபரிமலை வரும் பெண்களுக்கு  பாதுகாப்பு வழங்குவது இல்லை என்ற முடிவை கேரள அரசு எடுத்துள்ளது.

இதனால்,  பாதுகாப்பு கெடுபிடிகள் குறைந்துள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  நடப்பு ஆண்டு, அமைதியான சூழல் நிலவுவதாக சபரிமலைக்கு வந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்