டெல்லியில் தக்காளி விலை கடும் உயர்வு; ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை
டெல்லியில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
புதுடெல்லி,
இந்திய சமையலறைகளில் முக்கிய இடம் பிடிக்கும் காய்கறிகளில் தக்காளியும் ஒன்று. இந்தியாவில் பொதுவாக ஆண்டுக்கு 2 கோடி டன் தக்காளி விளைவதால், நாடு முழுவதுக்குமான தேவை பூர்த்தியாகிறது. மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, இமாசல பிரதேச மாநிலங்கள் தக்காளி விளைச்சலில் முன்னணியில் இருக்கின்றன.
இதில் கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து தக்காளி ஏற்றுமதி குறைந்தது.
இப்படி தக்காளி வரத்து குறைந்ததால் டெல்லியில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக டெல்லியில் இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டது. அதுவும் தக்காளியின் தரம் மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களை பொறுத்து ரூ.80 வரை கொடுக்க வேண்டி இருப்பதாக டெல்லிவாசிகள் குமுறுகின்றனர்.
டெல்லி மற்றும் தலைநகர் பிராந்திய பகுதிகளில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டது. தக்காளிக்கு பதிலாக தக்காளி கூழ் பாக்கெட்டுகளை சலுகை விலையில் வழங்க அரசின் காய்கறி, பழ நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
அதன்படி 200 கிராம் (800 கிராம் புதிய தக்காளிக்கு சமமானது) தக்காளி கூழ் ரூ.25-க்கு விற்கப்படுகிறது. இதைப்போல 825 கிராம் கூழ் (2.5 கிலோ தக்காளிக்கு சமமானது) ரூ.85-க்கும் விற்பனையாகிறது. ஆனால் இவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
டெல்லி ஜங்புராவில் தக்காளி கூழ் வாங்கிச்சென்ற மீனா அகர்வால் என்ற பெண் கூறுகையில், ‘தக்காளியின் சுவையே தனி. தக்காளி கூழின் சுவை அதுபோல வராது. எனவே தினசரி சமையலுக்கு நாங்கள் தக்காளி கூழை பயன்படுத்துவதில்லை. தக்காளி விலை அதிகரித்துள்ளதால், குறைந்த அளவில் தக்காளியை வாங்கி பயன்படுத்துகிறோம்’ என்று தெரிவித்தார். இந்த கருத்தையே டெல்லியின் பிறபகுதிகளை சேர்ந்த மக்களும் கூறி வருகின்றனர்.
தக்காளி விலை உயர்வால் டெல்லிவாசிகள் அவதிப்படுவதை தொடர்ந்து, தக்காளி வினியோகத்தை அதிகரிக்குமாறு தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.