தெலுங்கானாவில் விமான விபத்து: 2 பயிற்சி விமானிகள் பலி

தெலுங்கானாவில் நடந்த விமான விபத்தில், 2 பயிற்சி விமானிகள் பலியானார்கள்.

Update: 2019-10-06 12:38 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமானப்படை நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு ‘செஸ்னா’ விமானம் புறப்பட்டது. 2 பயிற்சி விமானிகள், வழக்கமான பயிற்சிக்காக அந்த விமானத்தை ஓட்டிச் சென்றனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார்.

அந்த விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து, ரேடார் திரையில் இருந்து மறைந்தது. விமானப்படை நிலையத்துடனான தொடர்பை இழந்தது.

அடுத்த சற்று நேரத்தில், விகாராபாத் மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தில் உள்ள பருத்தி வயலில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. அதற்கு முன்பு, வானத்திலேயே பலதடவை விமானம் குட்டிக்கரணம் அடித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்த நேரத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.தகவல் அறிந்தவுடன், விகாராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 2 பயிற்சி விமானிகளும் இறந்து கிடந்தனர். விமானத்தின் சேத பகுதிகளில் இருந்து 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஒரு பயிற்சி விமானியின் பெயர் பிரகாஷ் விஷால் என்று தெரிய வந்துள்ளது.

அவர் ராஜீவ் காந்தி விமான போக்குவரத்து அகாடமி என்ற தனியார் கல்வி நிறுவனத்தின் மாணவர் ஆவார். சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் குழுவும் சம்பவ இடத்துக்கு சென்றது. விபத்து குறித்து விசாரணை நடத்தியது.

மேலும் செய்திகள்