அயோத்தி வழக்கு விசாரணை: பாபர் காலத்தில் மசூதியை பராமரிக்க மானியம் அளிக்கப்பட்டது - முஸ்லிம் தரப்பு வாதம்

அயோத்தி வழக்கு விசாரணையில், பாபர் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும் மசூதியை பராமரிக்க மானியம் அளிக்கப்பட்டதாக முஸ்லிம் தரப்பு வாதிட்டது.

Update: 2019-10-04 23:30 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்பு விசாரணை நடந்துவருகிறது.

அனைத்து தரப்பிலும் முதல் சுற்று வாதங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது சுற்றில் இந்து அமைப்புகள் தரப்பில் முன்வைத்த வாதங்களுக்கு எதிராக சன்னி வக்புவாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவன் வாதாடினார். அவர் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

மசூதி என்பது ஒருவர் அல்லாவை நோக்கி தொழுகை நடத்தும் இடம்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே:- மசூதி புனிதமானதா? என்று கேள்வி எழுப்பினார்.

ராஜீவ் தவன்:- ஆமாம் மசூதி எப்போதும் புனிதமானதுதான். ஒருவர் எதற்கு மசூதிக்கு போகிறார். அல்லாவிடம் தன்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கத்தான். சட்டவிரோதமாக நடைபெற்ற செயல்கள் தொடர்பாக இந்த கோர்ட்டு எந்த விதமான கண்ணோட்டம் வைத்துள்ளது? அல்லது அந்த சட்டவிரோதமான செயலை கண்டுகொள்ளாமல் விடுமா? 1992 டிசம்பர் 6-ந் தேதி நடைபெற்றது வகுப்பு ரீதியாக பிரிவினை ஏற்படுத்தும் நடவடிக்கை. மொகலாயர்களின் படையெடுப்பு மற்றும் தாக்குதல்கள் மதரீதியானவை என்று எதிர்தரப்பில் கூறுகிறார்கள். அப்படி என்றால் 1992-ல் நடைபெற்றது என்ன?

சிலர் பாபர் பெயரையும் சிலர் அவுரங்கசீப் பெயரையும் எடுக்கிறார்கள். அங்கு மசூதி இருந்திருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் இல்லை என்கிறார்கள். அவர்கள் 1855-ல் இருந்து 1989 வரை அங்கு யாருக்கு வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார்கள்? அந்த முழு இடத்தையும் ஒருதரப்பாக உரிமைகோரும் முகாந்திரம் இல்லை.

ஆங்கிலேயர்கள் பிறப்பித்த வக்பு சட்டம் தன்னிச்சையானது. எங்கள் மசூதியை இடித்து தகர்த்துவிட்டு என்னையே துன்புறுத்துகிறவன் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

அப்போது மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், இந்த உயரிய கோர்ட்டு நாடகங்களை நடத்துவதற்கான இடம் அல்ல என்று ஆட்சேபம் தெரிவித்தார். அதற்கு ராஜீவ் தவன், நான் சட்டத்தின் அடிப்படையில்தான் என் வாதங்களை முன்வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து, ராமர் உள்ளே கோபுரத்தின் கீழ் உள்ள இடத்தில் பிறந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். அதை நிரூபியுங்கள் என்று முஸ்லிம்கள் கோருகிறார்கள். இந்த வழக்கின் சாரமே இதுதான்.

பாபர் காலத்திலும் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் மசூதியை பராமரிக்க மானியம் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் வாதம் மிகவும் எளிமையானது. 1885-ம் ஆண்டுக்கு முன்பு அங்கு என்ன நடைபெற்றது என்பதற்கு சில பயணிகளின் குறிப்பைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றார்.

வருகிற திங்கட்கிழமை வாதங்கள் தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின்போது தலைமை நீதிபதி, இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் வருகிற 17-ந் தேதிக்குள் தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும், தீர்ப்பின் வரைவினை தயார்செய்ய நீதிபதிகளுக்கு குறைந்தது 4 வாரங்கள் தேவைப்படுகிறது என்றும் கூறினார்.

கடந்த செப்டம்பர் 19-ந் தேதி விசாரணையின்போது அனைத்து தரப்பினரும் தங்கள் வாதத்தை இந்த மாதம் 18-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியிருந்தார். தற்போது ஒருநாள் முன்னதாகவே வாதங்களை முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வுபெறுவதால், 70 ஆண்டுகளாக நீண்டுவரும் இந்த வழக்கில் தீர்ப்பு அதற்கு முன்பே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்