உத்தரபிரதேசத்தில் பலத்த மழை: ஜெயிலுக்குள் வெள்ளம் புகுந்தது - 900 கைதிகள் வெளியேற்றம்

உத்தரபிரதேசத்தில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து, ஜெயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த 900 கைதிகள் வேறு ஜெயில்களுக்கு மாற்றப்பட்டனர்.

Update: 2019-09-30 22:36 GMT
பல்லியா,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

நீர்வரத்து அதிகரித்ததால், கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்லியாவில், கங்கை ஆற்றை ஒட்டி மாவட்ட ஜெயில் உள்ளது.

கங்கை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், ஆற்றை ஒட்டி உள்ள மாவட்ட ஜெயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள அறைகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

அவ்வளவு தண்ணீரையும் வெளியேற்றுவது இயலாத காரியமாக உள்ளது. இதனால், ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 900 கைதிகளை வேறு ஜெயில்களுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 500 கைதிகள், அசம்கார் ஜெயிலுக்கும், 400 கைதிகள் அம்பேத்கர்நகர் ஜெயிலுக்கும் மாற்றப்பட்டனர்.

பரியா தாலுகாவில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆசிரமம் தண்ணீரில் மூழ்கி விட்டது.

அதுபோல், பல்லியா-சாப்ரா ரெயில் பாதை கடுமையாக சேதமடைந்துள்ளது. அங்கு பழுது பார்க்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அந்த பாதையில் சுமார் 20 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 20 ரெயில்கள், வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்