பாகிஸ்தானுடன் போருக்கு தயார் - இந்திய விமானப்படை தளபதி உறுதி

பாகிஸ்தானுடன் போருக்கு தயார் என்று இந்திய விமானப்படை தளபதி தெரிவித்தார்.

Update: 2019-09-20 23:00 GMT
மும்பை,

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, நேற்று மும்பையில் ஒரு பத்திரிகை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

பாகிஸ்தான் தலைமை, இந்தியாவுடன் அணுஆயுத போர் தொடங்குவதுபோல் அச்சுறுத்தி வருவது குறித்து தனோவாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுடன் ராணுவ மோதலுக்கு தயாராக இருக்கிறோம். மோதலை தொடங்குவது பற்றி அரசியல் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

நான் 2017-ம் ஆண்டு விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றபோது, எனது கீழ்நிலை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினேன். அதில், நமது எதிரி போர் புரிய முடிவெடுத்தால், குறுகிய இடைவெளியில் போருக்கு தயாராக வேண்டும் என்று எழுதி இருந்தேன்.

இருந்தாலும், பாகிஸ்தான் மக்களை கவரவே அந்நாட்டு தலைவர்கள் அப்படி பேசி வருகிறார்கள். பாகிஸ்தானின் போர்த்திறன் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இது இருமுனை போராக இருக்காது.

நம்மிடம், சுகோய்-30 ரக விமானங்களும், ‘பிரமோஸ்’ சூப்பர்சானிக் குரூஸ் ஏவுகணைகளும் உள்ளன. அவற்றுக்கு பாகிஸ்தான் பதில் சொல்ல முடியாது.

இந்திய விமானி அபிநந்தன் குழந்தையாக இருக்கும்போதிருந்தே அவரை எனக்கு தெரியும். அவருடைய தந்தையுடன் நான் பணியாற்றினேன்.

கார்கிலில் அஜய் அகுஜா என்ற விமானியை நாம் இழந்தோம். அவர் விமானத்தில் இருந்து குதித்தபோது, பாகிஸ்தான் பகுதியில் விழுந்தார். அங்கு சுடப்பட்டார். பிறகு அவர் திரும்பி வரவில்லை. ஆனால், அபிநந்தனை மீட்டு வந்து விடலாம் என்று அவருடைய தந்தையிடம் நான் கூறினேன். அதுபோல், குறுகிய இடைவெளியில் அவர் மீண்டு வந்தார். அதற்கு நமது தேசிய தலைமைதான் காரணம். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர் காட்டிய மனஉறுதி பாராட்டத்தக்கது.

அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய படம் கையில் கிடைக்கவில்லை. ரேடார் புகைப்படத்தையே காட்ட முடிந்தது.

‘ரபேல்’ போர் விமானம் வந்த பிறகு, விமானப்படையின் வலிமையில் பெரும் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்