சுரங்க உரிமங்களை கார்பரேட் நண்பர்களுக்கு பரிசளிக்கிறது - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

விதிமுறைகளை மீறி சுரங்க உரிமங்களை கார்பரேட் நண்பர்களுக்கு மோடி அரசு பரிசளித்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

Update: 2019-09-09 21:53 GMT
புதுடெல்லி,

இரும்புத்தாது மற்றும் பிற கனிம வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களுக்கான ஒப்பந்த உரிமங்களை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக மத்திய பா.ஜனதா அரசு மீது காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இரும்புத்தாது மற்றும் பிற சுரங்கங்கள் தொடர்பான ஏராளமான உரிமங்களை விதிமுறைகளை மீறி மத்திய அரசு புதுப்பித்து வழங்கி இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக மிகப்பெரிய நன்கொடைகளை பெற்றுக்கொண்டு இந்த உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அரசுக்கு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கை விசாரிக்க போதுமான தகுதி இருப்பதாக கருதிய நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் ஒருவரையும் நியமித்தனர்.

இது ஒரு அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டு ஆகும். இந்த விவகாரத்தில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி 5 மாதங்கள் கடந்த பின்னரும், மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

சுரங்கங்களை ஏலமின்றி தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு அவசர சட்டம் என்ற பெயரில் புதிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. இதன் மூலம் எந்த கட்டணமும் வாங்காமல் சுரங்கங்களின் குத்தகை புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி சுமார் 358 சுரங்கங்களின் உரிமங்கள் எந்தவித முன்பணமும் வாங்காமல் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் சில சுரங்கங்களின் ஒப்பந்த காலம் 2030-ம் ஆண்டு வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளன. மோடி அரசு தனது கார்பரேட் நண்பர்களுக்கு இந்த உரிமங்களை பரிசாக வழங்கி வருகிறது. இன்னும் 288 சுரங்கங்களின் உரிமங்கள் புதுப்பித்தலுக்காக இருக்கின்றன.

இந்த உரிமங்களுக்காக கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு பெற்றுக்கொண்ட அரசியல் நன்கொடைகள் எவ்வளவு? என்பதை வெளியிட வேண்டும். சுரங்க ஒதுக்கீட்டுக்காக ஏல முறை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்த நிலையில், மக்களை பாதிக்கும் இந்த வழிமுறைகளை மத்திய அரசு மேற்கொண்டது ஏன்?

மொத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் சுரங்க உரிமங்கள் புதுப்பிக்கப்பட்ட இந்த விவகாரத்தை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி விசாரித்து, இதன்மூலம் ஏற்பட்ட உண்மையான இழப்பு எவ்வளவு? என்பது குறித்து நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு பவன் கெரா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்