‘வளர்ச்சியில்லா 100 நாட்களுக்காக மோடி அரசுக்கு வாழ்த்துகள்’ - ராகுல்காந்தி கிண்டல்

வளர்ச்சியில்லா 100 நாட்களுக்காக மோடி அரசுக்கு வாழ்த்துகள் என ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

Update: 2019-09-08 23:15 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு 2-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை மத்திய அரசு நேற்று கொண்டாடியது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த 100 நாட்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாக பா.ஜனதாவினர் பெருமிதம் பொங்க கூறி வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசின் இந்த 100 நாள் ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. குறிப்பாக இந்த கொண்டாட்டங்களுக்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மோடி அரசின் வளர்ச்சியில்லா 100 நாட்களுக்கு வாழ்த்துகள். தொடர் ஜனநாயக கவிழ்ப்பு, வெளிப்படையான தலைமைத்துவ பற்றாக்குறை, விமர்சனங்களை தவிர்க்க ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள், சூறையாடப்பட்ட பொருளாதாரத்துக்கு வழிகாட்டலும், திட்டமிடலும் தேவை போன்றவைதான் தற்போது நிலவுகின்றன’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல, காஷ்மீர் விவகாரம், அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்சினை, எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் போன்ற சம்பவங்களை முன்வைத்து காங்கிரஸ் மூத்த செய்தி தொடர்பாளர் கபில்சிபல் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மோடி அரசின் 100 நாள் ஆட்சி குறித்து விவரித்த அவர், ‘சாதாரண குடிமகனின் பிரச்சினைகள் பெருகுகிறது, ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக மாறிவிட்டன, பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கிறது, எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன, கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக தெளிவான கொள்கை இல்லை, சிறு வியாபாரிகள் சிக்கலில் ஆழ்ந்துள்ளனர்’ எனறு குற்றம் சாட்டினார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியும் பா.ஜனதா அரசின் 100 நாள் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து இருந்தது. இதுகுறித்து அந்த கட்சியின் டுவிட்டர் தளத்தில் கூறும்போது, ‘பா.ஜனதா அரசின் 2-வது முறை ஆட்சியை 3 வார்த்தைகளில் அடக்கி விடலாம். அவை கொடுங்கோன்மை, குழப்பம் மற்றும் அராஜகம் ஆகியவைதான்’ என்று குறிப்பிட்டு உள்ளது.

மத்திய அரசின் 8 துறைகளின் வளர்ச்சி 2 சதவீதத்துக்கும் கீழே இருப்பதாகவும், ஆனால் நாட்டின் பொருளாதார மந்தநிலையை நிதி மந்திரி ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற பொருளாதார வல்லுனர்களின் அறிவுரைகளை மத்திய அரசு புறந்தள்ளி இருப்பதாகவும் கூறியிருந்தது.

மேலும் செய்திகள்