மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மும்பையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை,
மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் பின்னர் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு வரை அவ்வப்போது கொட்டி தீர்த்த கனமழை மும்பையில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டது.
பின்னர் 20 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மும்பையில் மழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. மும்பை நகருக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் 2 நாட்கள் விடாமல் பேய் மழை கொட்டியது.
இதன் காரணமாக மும்பை நகரம் வெள்ளக்காடாய் மாறியது. சாலைகள், தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பஸ், ரெயில் போக்குவரத்து அடியோடு முடங்கியது.
இரவில் வீடு திரும்ப முடியாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் ரெயில் நிலையங்களில் பரிதவித்தனர். விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மும்பைவாசிகள் கொட்டும் மழையிலும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று கரைத்தனர். அதன்பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பெரியளவில் மழை பெய்யாமல் இருந்தது.
இந்தநிலையில், நேற்று பிற்பகல் 3 மணி முதல் மும்பையில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவிலும் நீடித்தது. மழை வெளுத்து வாங்கியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
இந்தநிலையில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மும்பையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பால்கர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், ராஜ்காட் மற்றும் தானே போன்ற இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.