மலப்புரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மாயமானதாக தகவல்

கேரள மாநிலம் மலப்புரத்தில் நேரிட்ட நிலச்சரிவில் பலர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-08-09 09:36 GMT
கேரளாவில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தில் மழை தொடர்பான விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் மாயமாகியதாக அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு நேரிட்ட காவல்பாராவிற்கு போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான உபகரணங்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிக்கு உதவ ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு பீகாரிலிருந்து வருகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவினால் காவல்பாரா பகுதி மாவட்டத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவில் 4 பேரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவினால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்