அமைதி, பாதுகாப்பினை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு; வடக்கு பகுதி தளபதி
அமைதி மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என வடக்கு பகுதி தளபதி கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் நேற்று கூடின. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாக்களை தாக்கல் செய்து பேசுகையில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி உத்தரவிட்டு இருப்பதாக கூறினார்.
அதன்படி காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, அதிகாரம் அளிக்கும் 370 மற்றும் 35 ஏ-வது பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் என ஒரு யூனியன் பிரதேசம், லடாக் என மற்றொரு யூனியன் பிரதேசம் என இரு பகுதிகளாக பிரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்று அப்போது அவர் கூறினார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இன்று தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, வடக்கு பகுதி தலைமை தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் தலைமையில் அதிரடி நடவடிக்கைக்கு தயாராவது பற்றிய ஆய்வு கூட்டம் ஸ்ரீநகரில் இன்று கூடியது.
இந்த கூட்டத்தில் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் முக்கிய குழுக்களை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்பின் ரன்பீர் சிங் கூறும்பொழுது, அமைதி மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.