கலவர பகுதிக்கு சென்ற யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா ‘குட்டு’

ஒவ்வொருவரும் கடமையை உணர்வது நல்லது என யோகி ஆதித்யநாத் கலவர பகுதிக்கு சென்றது குறித்து பிரியங்கா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-21 22:26 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் உம்பா கிராமத்தில் நில தகராறில் பழங்குடியின மக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த கிராமத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா செல்ல முயன்றபோது, தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். பின்னர், மிர்சாபூர் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த அவரை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சந்தித்தனர்.

இதற்கிடையே, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், நேற்று சோன்பத்ராவுக்கு நேரில் சென்றார். இதுகுறித்து பிரியங்கா தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சோன்பத்ரா பயணத்தை வரவேற்கிறேன். இது தாமதமான பயணமாக இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக நிற்பது அரசின் கடமை. ஒருவர் தனது கடமையை உணர்ந்து கொள்வது நல்லதே. உம்பா மக்களின் 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்“ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்