85 விமானங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-24 11:14 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் புறப்பட வேண்டிய விமானங்கள் விமான நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டும், பறந்து செல்லும் விமானங்கள் திட்டமிடப்படாத விமான நிலையங்களில் இறங்கிய பின்னர் தீவிர சோதனையும் நடத்தப்படுகிறது. இதில் வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டு, அதன் பின்னர் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

இந்நிலையில் இன்று இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா, ஆகாசா ஏர் ஆகியவற்றின் 85 விமானங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சி.ஐ.எஸ்.எப் அதிகாரபூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.

வெடி குண்டு மிரட்டலால் கடந்த 10 நாட்களில் 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலாக சமூக வலைத்தளங்கள் மூலமாகவே இந்த மிரட்டல்கள் வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தொடர் கதையாகி வரும் வெடிகுண்டு மிரட்டலால் விமான நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்