குறைவான எரிபொருளுடன் தரையிறங்கிய விமானம்! பெரும் விபத்து தவிர்ப்பு
கூடுதலாக 10 நிமிடங்கள் மட்டுமே பறக்கும் அளவு எரிபொருளுடன் விஸ்தாரா நிறுவன விமானம் லக்னோவில் தரையிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
மும்பையில் இருந்து டெல்லிக்கு விஸ்தாரா என்ற தனியார் நிறுவன விமானம் 153 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் லக்னோவில் தரையிறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் விஸ்தாரா விமான பைலட், விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் ஏடிசியிடம் எரிபொருள் குறைவாக உள்ளது என்றார். மேற்கொண்டு 10 நிமிடம் மட்டுமே பறக்கும் அளவுக்கு மட்டுமே விமானத்தில் எரிபொருள் இருப்பதாக விமானி கூறவே, நிலைமையை புரிந்து கொண்ட ஏ.டி.சி. அதிகாரிகள், விஸ்தாரா, விமானம் லக்னோவில் உடனடியாக தரையிறங்க அனுமதி அளித்துள்ளனர். விமானம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வெறும் 300 கிலோ பெட்ரோல் மட்டுமே இருந்துள்ளது. இதனை வைத்துக் கொண்டு வான்வெளியில் 10 நிமிடங்களுக்கு மட்டுமே வட்டமடிக்க முடியும்.
பொதுவாக மும்பையில் இருந்து டெல்லி செல்லும் விமானங்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும். இதுதொடர்பாக விஸ்தாரா நிறுவனம் அளித்த பதிலில் ”போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததாகவும், முதலில் டெல்லியில் மோசமான வானிலை எனக்கூறி லக்னோவிற்கு விமானம் திருப்பி விடப்பட்டது. ஆனால், லக்னோவிலும் தெளிவான வானிலை இல்லை எனக்கூறி கான்பூர் அல்லது பிரக்யாராஜ்ஜில் தரையிறக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
பின்னர் லக்னோ வானிலை தெளிவானதாக கூறி, அங்கு தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி லக்னோவிற்கு மீண்டும் விமானம் திரும்பியது. மாற்று வழிகளில் திடீரென வானிலை மோசமானதே எரிபொருள் குறைந்து போனதற்கு காரணம். விமான போக்குவரத்து விதிகளின் படி கூடுதல் எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான எரிபொருளுடன் விமானம் தரையிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.