திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டு சென்றார்.

Update: 2019-07-14 23:15 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திருமலைக்கு வந்தார். அங்கு அவர் இரவு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவருடைய மனைவி சவிதா, மகன் பசந்த்குமார், மகள் சுவாதி ஆகியோர் புறப்பட்டு ஸ்ரீவாரி கோவில் எதிரே வந்தனர்.

அங்கிருந்து ஒரு பேட்டரி காரில் ஸ்ரீவாரி புஷ்கரணிக்கு வந்தனர். அவர்கள், புஷ்கரணியில் இருந்து புனித நீரை கைகளில் எடுத்து, தங்களின் தலையில் தெளித்துக்கொண்டனர். பின்னர் அங்குள்ள வராகசாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து பேட்டரி காரில் வந்து, ஏழுமலையான் கோவிலுக்கு சற்று அருகே இறங்கிக்கொண்டனர். அதன்பின் கோவிலின் பிரதான நுழைவு வாயிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நடந்து வந்தார். அங்கு, அவருக்கு மேள தாளம் முழங்க திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் உயரிய வரவேற்பான, “இஸ்தி கப்பல்” வரவேற்பு (வெள்ளித்தட்டில் லட்டு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வைத்து) அளிக்கப்பட்டது.

ஜனாதிபதியை, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரும் குடும்பத்தினரும் மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மூலவர் சன்னதியில் இருந்து வெளியே வந்ததும், தங்கக்கோபுரத்தை வலம் வந்து, விமான வெங்கடாசலபதியை வழிபட்டனர்.

அங்குள்ள பிரதான உண்டியலில் ஜனாதிபதி காணிக்கை செலுத்தினார். கோவில் உள்ளே பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார்கள்.

கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தை அடைந்ததும், ஜனாதிபதிக்கும் குடும்பத்தினருக்கும் லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. ஜனாதிபதிக்கு ஏழுமலையான் உருவப்படமும் வழங்கப்பட்டது. பின்னர் சேஷ வஸ்திரம் போர்த்தி கவுரவித்தனர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.

இதையடுத்து கோவிலில் இருந்து வெளியே வந்ததும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பக்தர்களை நோக்கி கையசைத்தப் படி நடந்து வந்து, பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.

அதைத்தொடர்ந்து மாலை 3 மணியளவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருமலையில் இருந்து காரில் புறப்பட்டு மாலை 3.50 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையத்துக்குச் சென்றார்.

அங்கிருந்து மாலை 4.30 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்றார். ஜனாதிபதி திருமலைக்கு வந்ததையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்