ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பரிமாற்றங்களுக்கு ‘பான் கார்டு’க்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம் - மத்திய அரசு தகவல்

ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பரிமாற்றங்களுக்கு ‘பான் கார்டு’க்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-06 23:00 GMT
புதுடெல்லி,

கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காக ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணப்பரிமாற்றங்களுக்கு பான் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் வருமான வரி செலுத்துவோரின் நலனுக்காக பான் கார்டு பயன்படுத்தப்படும் இடங்களில், அதற்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம் என தற்போதைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து பான் கார்டு பயன்படும் இடங்களில், ஆதாரை மாற்றி வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘நாட்டில் 120 கோடிக்கும் அதிகமானோரிடம் ஆதார் கார்டு உள்ளன. இன்று 22 கோடி பான் கார்டுகளுடன் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளன. அதே நேரம் ஆதார் இருந்தால் ஒருவர் பான் எண்ணுக்கு பதிலாக பயன்படுத்த முடிகிறது. எனவே இது மிகவும் வசதியாக இருக்கிறது’ என்று கூறினார்.

அப்போது அவரிடம், ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணப்பரிமாற்றங்களுக்கு பான் கார்டுக்கு பதிலாக ஆதார் பயன்படுத்தலாமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அதிலும் நீங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தலாம்’ என்று பதிலளித்தார்.

மேலும் செய்திகள்