வீட்டில் இருந்தவாறு பணி செய்யக்கூடாது: சரியான நேரத்துக்கு அலுவலகம் வர வேண்டும் - மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

வீட்டில் இருந்தவாறு பணி செய்யக்கூடாது என்றும், சரியான நேரத்துக்கு அலுவலகம் வர வேண்டும் என்றும் மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

Update: 2019-06-12 22:00 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் மந்திரிகளுக்கு பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, மந்திரிகள் அனைவரும் காலந்தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதன்படி அனைத்து மந்திரிகளும் ஒழுங்காக அலுவலகத்துக்கு வரவேண்டும் எனவும், அதுவும் சரியான நேரத்துக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் அலுவலகம் வந்தவுடன், புதிய பணிகள் குறித்து அமைச்சக அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வீட்டில் இருந்து பணி செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இணை மந்திரிகளுக்கு கேபினட் மந்திரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக்கூறிய அவர், முக்கிய ஆவணங்களை இணை மந்திரிகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அமைச்சகத்தின் பரிந்துரைகளை கேபினட் மற்றும் இணை மந்திரிகள் இணைந்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மந்திரிகள் அனைவரும் தங்கள் தொகுதியில் மக்களை சந்திப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் எனவும், இதில் மந்திரிகளும், எம்.பிக்களும் ஒரே மாதிரிதான் எனவும் அவர் உறுதிபட கூறினார்.

மேலும் செய்திகள்