புற்றுநோய் தாக்கியதாக பெண்ணுக்கு தவறுதலாக சிகிச்சை தலைமுடி கொட்டிய பரிதாபம்
அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் ஒருவருக்கு தவறுதலாக புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரது தலைமுடி கொட்டியது.
கோட்டயம்,
புற்றுநோய் தாக்கியவருக்கு வழங்கப்படும் முக்கியமான சிகிச்சைகளில் கீமோதெரபி எனப்படும் நவீன சிகிச்சையும் ஒன்று. இந்த சிகிச்சையால் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவதுடன், அது மேலும் பரவாமலும் தடுக்கப்படுகிறது.
இந்த சிகிச்சையால் புற்றுநோய்க்கு பெரும் நிவாரணம் கிடைத்தாலும், இந்த சிகிச்சையின் வீரியத்தால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக நோயாளிகளுக்கு முடி கொட்டி, சருமத்தில் ஆங்காங்கே புண்கள் ஏற்பட்டு பெரும் அவதியை ஏற்படுத்தும். எனவே இந்த சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் பெரும் துன்பத்தை சந்திக்கின்றனர்.
மார்பக கட்டி
இந்த நிலையில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்துக்கு உட்பட்ட குடசநாடு பகுதியை சேர்ந்த ரஜனி (வயது 38) என்ற பெண்ணுக்கு மார்பகத்தில் சிறிய கட்டி உருவானது. இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரஜனி கடந்த பிப்ரவரி மாதம் சென்றார்.
அங்கு அவரது ரத்த மாதிரிகளை எடுத்து தனியார் பரிசோதனைக்கூடத்துக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். மேலும் மருத்துவக்கல்லூரியில் இருந்த ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தனியார் ஆய்வகத்தில் ரஜனியின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த ஊழியர்கள், அவருக்கு புற்றுநோய் இருப்பதாக அறிக்கை கொடுத்தனர்.
புற்றுநோய் இல்லை
இதை நம்பி டாக்டர்கள் உடனே ரஜனிக்கு கீமோதெரபி சிகிச்சையை தொடங்கினர். இந்த சிகிச்சை சுமார் 2 வாரங்கள் கடந்த நிலையில், மருத்துவக்கல்லூரி ஆய்வகத்தில் இருந்து அறிக்கை வந்தது. அதில் ரஜனிக்கு புற்றுநோய் இல்லை என கூறப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், உடனே கீமோதெரபியை நிறுத்தினர்.
பின்னர் தனியார் ஆய்வகத்துக்கு அனுப்பிய ரஜனியின் ரத்த மாதிரியை வாங்கி மருத்துவக்கல்லூரி ஆய்வகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மையத்துக்கு அனுப்பி சோதிக்கப்பட்டது. அங்கு பரிசோதிக்கப்பட்ட போதும், ரஜனிக்கு புற்றுநோய் இல்லை என்பது உறுதியானது.
பக்க விளைவுகளால் அவதி
இதைத்தொடர்ந்து புற்றுநோய் பிரிவு மருத்துவர்கள் ரஜனியை பொது அறுவை சிகிச்சை துறைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தில் இருந்த கட்டி அகற்றப்பட்டது.
இதற்கிடையே கீமோதெரபி சிகிச்சையால் ரஜனிக்கு கடும் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அவரது முடிகள் அனைத்தும் கொட்டிப்போனதுடன், உதடுகள் உள்பட உடலின் பல்வேறு இடங்களில் புண்கள் தோன்றி பெரும் அவதியடைந்து வருகிறார்.
விசாரணைக்கு உத்தரவு
எனவே அவர் அரசு மருத்துவக்கல்லூரியின் தவறான சிகிச்சையால் தனக்கு ஏற்பட்ட இந்த விபரீதம் குறித்து மாநில சுகாதார மந்திரி சைலஜாவிடம் புகார் அளித்தார். அதன்படி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு தற்போது உத்தரவிட்டு உள்ளது.
மேலும் ரஜனிக்கு மேற்கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவை மாநில அரசே ஏற்கும் என மாவேலிக்கரை எம்.எல்.ஏ. ராஜேஷ் கூறியுள்ளார். கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் நடந்துள்ள இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வறுமையில் வாடும் குடும்பம்
கணவர் ஏற்கனவே பிரிந்து சென்றதால் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து தனது 8 வயது மகள் மற்றும் வயதான பெற்றோரை கவனித்து வந்த ரஜனி, மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ளார். ரஜனியின் வருமானத்தை நம்பியே இருந்த அவரது குடும்பம் தற்போது வறுமையில் வாடி வருகிறது.