மும்பை பங்கு சந்தை; உச்ச அளவை தொட்டு நிறைவடைந்த சென்செக்ஸ் குறியீடு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 40,267.62 புள்ளிகள் என்ற உச்ச அளவை தொட்டு சாதனை படைத்துள்ளது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடானது 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 40 ஆயிரத்து 254 புள்ளிகள் என்ற சாதனை அளவை தொட்டது. இதன்பின் மதியம் 2.40 மணியளவில் 516.79 புள்ளிகள் உயர்வடைந்து 40,230.99 புள்ளிகளுடன் காணப்பட்டது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 150 புள்ளிகள் உயர்வடைந்து முதன்முறையாக 12,081.85 புள்ளிகளாக இருந்தது.
சென்செக்ஸ் குறியீடு உயர்வால் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்டஸ்இன்ட் வங்கி, எச்.யூ.எல்., மாருதி, கோல் இந்தியா, எச்.டி.எப்.சி. டுவின்ஸ், ஆர்.ஐ.எல். மற்றும் டி.சி.எஸ். ஆகியவை 5 சதவீத லாபத்துடன் இயங்கின.
அதேவேளையில், ஐ.டி.சி., எல் அண்டு டி மற்றும் என்.டி.பி.சி. ஆகியவை 0.29 சதவீத நஷ்டத்துடன் இயங்கின.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவானது இந்த வாரம் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தினை (ரெப்போ ரேட்) குறைக்கும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத வகையில், 553.42 புள்ளிகள் என்ற உச்ச அளவை தொட்டு 40,267.62 என்ற புள்ளிகளுடன் இன்று நிறைவடைந்து உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் 165.75 புள்ளிகள் உயர்ந்து 12,088.55 புள்ளிகள் என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.