நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை கோரி பிரபு எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் மனு

நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், சபா நாயகரின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பிரபு எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்து உள்ளார்.

Update: 2019-05-08 22:15 GMT
புதுடெல்லி,

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் கடந்த மாதம் 30-ந் தேதி நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு மனுதாரர்களான 2 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்தது.

அத்துடன், மனுவின் மீது பதில் அளிக்க சபாநாயகர் ப.தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடராத கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு சார்பில் அவருடைய வக்கீல் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். அதில், “சபாநாயகர் அனுப்பிய நோட்டீசில் விதித்த கெடு 9-ந் தேதியுடன் முடிகிறது. மற்ற இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை பிரபுவுக்கு பொருந்தாத பட்சத்தில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று பிரபு கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே சபாநாயகரின் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை எம்.எல்.ஏ. பிரபுவுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலகம் தரப்பில் கேட்கப்பட்டபோது, “சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் பொருந்தும். அதனால், எம்.எல்.ஏ. பிரபு விளக்கம் அளிக்க தேவையில்லை” என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், எம்.எல்.ஏ. பிரபு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ப.தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரபு கூறி உள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று பிரபு தரப்பில் நேற்று தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், நோட்டீஸ் தொடர்பான ஆவணங்களை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்