கையில் இருந்து கட்சி நழுவிவிட்டது: நிலைமை சாதகமாக இல்லாததால் சரத் பவார் போட்டியிடவில்லை - பிரதமர் மோடி பேச்சு

நிலைமை சாதகமாக இல்லாததால், சரத் பவார் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது கையில் இருந்து கட்சி நழுவி விட்டது என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2019-04-01 23:45 GMT
கையில் இருந்து கட்சி நழுவிவிட்டது: நிலைமை சாதகமாக இல்லாததால் சரத் பவார் போட்டியிடவில்லை - பிரதமர் மோடி பேச்சு
வார்தா,

மராட்டிய மாநிலம் வார்தாவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பா.ஜனதா-சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:-

‘இஸ்ரோ‘ விஞ்ஞானிகள், இப்போது ஒரு புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சி என்னை ‘கழிப்பறை காவலாளி‘ என்று சொல்கிறது. நீங்கள் என்னை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கூறிய இந்த வார்த்தையை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். ஏனென்றால், இந்த நாட்டின் பெண்களையும், குழந்தைகளையும் காப்பவனாக நான் இருக்கிறேன் என்ற அர்த்தம் அதில் இருக்கிறது. உங்களது வசைமொழிகள்தான் எனக்கு ஆபரணங்கள்.

அமைதியை விரும்பும் இந்து மதத்தினரை ‘பயங்கரவாதிகள்‘ என்று முத்திரை குத்தியவர்கள்தான் காங்கிரசார். அதனால்தான், பெரும்பான்மை சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் நிற்கவே காங்கிரஸ் தயங்குகிறது.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இது சிக்கலான தருணம். வேட்பாளர் தேர்வைக்கூட சரியாக நடத்த முடியவில்லை. யார் எங்கே போட்டியிடுவது என்றே தெரியவில்லை.

கட்சியில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது. சரத் பவாரின் பிடியில் இருந்து கட்சி நழுவி விட்டது. நிலைமை சாதகமாக இல்லாததால், இந்த தேர்தலில் சரத் பவார் போட்டியிடவில்லை.

ஒரு காலத்தில், அவர் பிரதமர் ஆகும் கனவில் இருந்தவர். பின்னர், மாநிலங்களவையில் இருந்தாலே போதும், தேர்தலில் போட்டியிடவே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார். அவர் எந்த பக்கம் காற்று வீசுகிறது என்பதை நன்றாக தெரிந்தவர்.

மராட்டியத்தில், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, கும்பகர்ணன் போன்றது. ஆட்சியில் இருக்கும்போது, 6 மாதங்கள் மாற்றி மாற்றி தூங்குவார்கள். ஆனால், விவசாயிகளிடம் இந்த கூட்டணி கொள்ளையடித்தது. நீர்ப்பாசன திட்ட ஊழலில் ஈடுபட்டது. விதர்பா பகுதி வறட்சிக்கு காரணமே இந்த கூட்டணிதான்.

மேலும், நமது ராணுவ வீரர்களையும் அவமானப்படுத்தியது. பாலகோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டது. அப்படியானால், நமது வீரர்களின் துணிச்சலை அவர்கள் நம்பவில்லையா? இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை விமர்சித்தார். போலாவரம் திட்டத்தை ஏ.டி.எம். போல சந்திரபாபு கருதுவதாகவும், அந்த திட்டத்தை காலதாமதம் செய்து பணம் ஈட்டி வருவதாகவும் மோடி குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்