ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி மறுத்துவிட்டார்: கெஜ்ரிவால்

மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி மறுத்துவிட்டார் என்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-01 06:46 GMT
விசாகப்பட்டினம்,

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறுத்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- “சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நான் சந்தித்து பேசினேன். ஆனால், அவர் மக்களவை தேர்தலுக்காக ஆம் ஆத்மியுடன் கைகோர்த்து போட்டியிட மறுப்பு தெரிவித்து விட்டார்” என்றார். அப்போது, டெல்லி முன்னாள் முதல் மந்திரியும் டெல்லி காங்கிரஸ் கட்சி தலைவருமான ஷீலா தீட்சித், கூட்டணி தொடர்பாக கெஜ்ரிவால் என்னை ஒருபோதும் சந்திக்கவில்லை என்று கூறியது பற்றி கெஜ்ரிவாலிடம் கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், “ராகுல் காந்தியை  நாங்கள் சந்தித்தோம். ஷீலா தீட்சித் முக்கியமான தலைவர் இல்லை” என்றார். 

பாரதீய ஜனதாவை முழுமையாக வீழ்த்த டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று கெஜ்ரிவால் விருப்பப்பட்டார். ஆனால், டெல்லி காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கெஜ்ரிவாலை கூட்டணியில் இணைப்பதற்கு மாறுபட்ட கருத்துக்கள் நிலவின. இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படும் வாய்ப்புகள் மங்கிப்போனது. 7 மக்களவை  தொகுதிகளை கொண்ட டெல்லியில், வரும் மே 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

மேலும் செய்திகள்