மாயாவதி முன்னாள் செயலாளரிடம் ரூ.225 கோடி பினாமி சொத்து ஆவணங்கள்; வருமான வரி துறை பறிமுதல்
மாயாவதியின் முன்னாள் செயலாளரிடம் இருந்து ரூ.225 கோடி மதிப்புள்ள பினாமி சொத்து ஆவணங்களை வருமான வரி துறை பறிமுதல் செய்துள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர் நெட் ராம். ரூ.90 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த வழக்கில் இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் லக்னோ நகரங்களில் இவரது வீடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனை 26 மணிநேரம் வரை நீடித்தது. இதில், லக்னோ மற்றும் டெல்லியில் இருந்து ரூ.1.64 கோடி மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டது. வங்கி லாக்கரில் ரூ.50 லட்சம் இருக்கும் என நம்பப்படுகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
இவர், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தனக்கு ஒரு தொகுதி ஒதுக்கும்படி கட்சி ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்தே வருமான வரி துறையின் கண்காணிப்பின் கீழ் அவர் வந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோண்ட் பிளாங்க் பேனாக்கள், ஒரு மெர்சிடிஸ் மற்றும் 2 ஃபார்ச்சூனர்ஸ் உள்ளிட்ட பினாமி பெயரிலான 4 ஆடம்பர ரக கார்கள் மற்றும் ரூ.225 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளுக்கான ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். நெட்ராமின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற உறவினர்கள், பங்குகள் வைத்துள்ள 30 துணை நிறுவனங்களுக்கான ஆவணங்களையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2002-2003ம் ஆண்டில் மாயாவதி முதல் மந்திரியாக இருந்தபொழுது அவருக்கு செயலாளராக இருந்தவர் நெட் ராம். கலால் துறை தலைவர், சர்க்கரை தொழிற்சாலை மற்றும் கரும்பு துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இவர் இருந்துள்ளார்.