எத்தியோப்பியா விமான விபத்து: உயிரிழந்த இந்திய பெண் அதிகாரி குடும்பத்தினரை தொடர்பு கொள்ள உதவுங்கள் - சுஷ்மா சுவராஜ் கோரிக்கை

எத்தியோப்பியாவில் போயிங் 737 விமான விபத்தில் உயிரிழந்த ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரி ஷிகா கார்க் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள உதவுங்கள் என்று சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-03-11 11:47 GMT
புதுடெல்லி,

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி சென்ற போயிங் 737 விமானம் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. விமானம் புறப்பட்ட 6  நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்தது, இதனையடுத்து விபத்துக்குள் சிக்கியது என தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் 149 பேரும் பணியாளர்கள் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். 

 உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது இரங்கல் தெரிவித்துள்ளார். 

விபத்தில் கென்யாவை சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவை சேர்ந்த 9 பேர்,  கனடாவை சேர்ந்த 18 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவை சேர்ந்த தலா 8 பேர், பிரான்ஸ், இங்கிலாந்தை சேர்ந்த 7 பேர், எகிப்தை சேர்ந்த 6 பேர், நெதர்லாந்தை சேர்ந்த 5 பேர், இந்தியா மற்றும் ஸ்லோவோகியாவை சேர்ந்த 5 பேரும் விபத்தில் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் பலியான ஷிகா கார்க், ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். நைரோபியில் நடக்கும் ஐ.நா. சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஷிகாவை தவிர்த்து வைத்யா பன்னாகேஷ், வைத்யா ஹன்சின், நுகவரபு மனிஷா ஆகிய இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஹர்ஷவர்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்த  இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றார்.

சுஷ்மா  சுவராஜ் மற்றொரு டுவிட்டில் கூறுகையில்,  " வைத்யா குடும்பத்தார் கனடாவின் டொரான்டோ நகரிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்களின் குடும்பத்தில் 6 பேர் விமான விபத்தில் இதற்கு முன் பலியாகியுள்ளனர் எனும் செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். 

எத்தியோப்பியா, கென்யாவில் உள்ள இந்திய தூதரகங்கள் உடனடியாக உங்களைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை அளிப்பார்கள். உங்கள் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள். 

"என். மணிஷாவின் உறவினருக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி நைரோபியில் உள்ள இந்தியத் துணைத்தூதர் ராகுல் சாப்ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது " எனத் தெரிவித்திருந்தார்.

அதேசமயம், ஐ.நா.வுக்கான இந்திய  அதிகாரி ஷிகா கார்க் குடும்பத்தினரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சுஷ்மா தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், " விமான விபத்தில் துரதிர்ஷ்டமாக உயிரிழந்த ஷிகா கார்க் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். 

அவர் கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள யாரேனும் உதவுங்கள் " என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்