கர்நாடகாவை அடுத்து குஜராத்திலும் காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகல், பா.ஜனதாவிற்கு தாவல்
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியிலிருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.
கர்நாடகாவில் சின்சோலி தொகுதியில் இருமுறை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உமேஷ் ஜாதவ். இவர் திடீரென சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரைச் சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். பின்னர் பா.ஜனதாவில் இணைந்தார். இதுபோன்ற சம்பவமும் குஜராத்திலும் நடைபெற்றுள்ளது.
குஜராத்தின் மனவதார் தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜவகர் சவ்டா தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார். ஜவகர் சவ்டா, குஜராத்தின் ஜூனாகட் மாவட்டத்தை சேர்ந்த பலமிக்க காங்கிரஸ் தலைவரான பெதாலிஜி சவ்டாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதாவில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷா படேல் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் பலம் 75-ஆக குறைந்தது.
இப்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.