மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிற பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மீண்டும் இட ஒதுக்கீடு அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் இட ஒதுக்கீட்டு நடைமுறையை கொண்டு வர வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

Update: 2019-03-07 21:00 GMT
புதுடெல்லி, 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் இட ஒதுக்கீட்டு நடைமுறையை கொண்டு வர வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மீண்டும் இட ஒதுக்கீடு

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிற ‘200 பாயிண்ட் ரோஸ்டர் சிஸ்டம்’ முறையை திரும்ப கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இது கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள எஸ்.சி., எஸ்.டி., இதர பிற் படுத்தப்பட்டோர் காலியிடங் களை நிரப்புவதற்கு உதவும் என கூறப்படுகிறது.

அவசர சட்டம்

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் மத்திய அரசின் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடங்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்புவதற்கு உதவும் வகையில் ‘மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களில் இட ஒதுக்கீடு) அவசர சட்டம்-2019’-க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதை மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.

5 ஆயிரம் காலியிடங்கள்

இது பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், “இந்த அவசர சட்டம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி, பல்கலைக் கழக ஆசிரியர்கள் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கு வழி வகுக்கும்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்