தூங்கவிடாமல் நீண்ட நேரம் நிற்க வைத்தனர், பாகிஸ்தான் பிடியில் அபிநந்தனுக்கு சித்ரவதை
பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் அனுபவித்த சித்ரவதை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வான் எல்லைக்குள் 27-ம் தேதி பாகிஸ்தான் வான்படைகள் அத்துமீறிய போது இந்திய விமானப்படை அடித்து விரட்டியது. பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, இந்தியாவின் மிக் 21 பிசோன் விமானமும் சிக்கிக்கொண்டது. அதில் சென்ற அபிநந்தன் உயிர்தப்பிய போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துவிட்டார். பின்னர் இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் கொடுத்த அழுத்தம் காரணமாக இரு நாட்களில் அபிநந்தனை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. அப்போது அபிநந்தனை மிகவும் நல்லவிதமாக நடத்தியதாக பாகிஸ்தான் சுயவிளம்பரம் செய்துக்கொண்டது. கடைசியாக வெளியிட்ட வீடியோவில் அவர்கள் செய்த எடிட்டிங் மூலம் அவர்கள் அபிநந்தனை எப்படி நடத்தியிருப்பார்கள் என சந்தேகம் எழச்செய்தது.
இப்போது பாகிஸ்தான் பிடியில் அபிநந்தன் எதிர்க்கொண்ட சித்ரவதை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அபிநந்தன் விவகாரத்தில் தகவல் அறிந்த பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி பேசுகையில் சித்ரவதைகளை பட்டியலிட்டுள்ளார். இந்திய விமானப்படையின் நகர்வு, விமானங்கள் நிலைநிறுத்தம், குறீயீடு எண்கள், தளவாடங்களின் ஏற்பாடு பற்றிய தகவல்களை பாகிஸ்தானிய அதிகாரிகள் கேட்டு துன்புறுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ளோம் என தெரிந்ததுமே ஆவணங்களை அழிக்க முயற்சி செய்துள்ளார். விமானப்படையில் கொடுக்கப்படும் பயிற்சியின்படி தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.
காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டபோது அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை. அவரை நீண்ட நேரம் நிற்க வைத்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவின் ரகசியங்களை பெற முயன்றுள்ளனர். அவருடைய காதுகளுக்கு அருகே ஸ்பீக்கர்களை அதிக சத்தத்தில் அலற விட்டுள்ளனர். தண்ணீரை மேலே ஊற்றி அடித்தும் துன்புறுத்தியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் 4 குழுக்கள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது. பிடிப்பட்ட 24 மணி நேரத்தில் கொடூரமாக விசாரித்துள்ளனர். பின்னர் ஓரளவுக்கு விசாரணை முறை மாறியுள்ளது என தெரியவந்துள்ளது.